வெள்ளி, 8 ஜூன், 2012

வலைப்பூக்களில் வலம் வரும் புதியவன். ஒரு சாதாரண குடிமகன் என்பதைத் தவிர என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. பொட்டலம் மடித்து வரும் காகிதம் முதல் எதையும் விடாமல் படிக்கும் ஒரு வழக்கம் எனக்கு. நல்லதோ கெட்டதோ எதையும் விடுவதில்லை. கண்டது கற்று நான் பண்டிதனாக வில்லை என்பதே உண்மை. வாழ்க்கையின் ஓட்டத்தில் சிறு துரும்பாக போன போக்கில் போய்க்கொண்டே இருக்கும் வாழ்வில் எங்கே நிறுத்தம் என்று தெரியாத வழிப்போக்கன். எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ முகங்கள், எத்தனையோ கதைகள் என மனதின் வன் தகட்டில் பதிந்து போன எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் முயற்சிதான் இந்த வலைப்பூ. யாரையும் சிறுமைப் படுத்தவோ, வருத்தமுறச் செய்யவோ இதில் எந்த முகாந்திரமும் இல்லை நண்பர்களே. சிறு வயதில் கலாதர் என்று ஒரு எழுத்தாளர் எழுதிய ஒலியற்ற ஓசைகள் என்ற சித்து விளையாட்டுத் தொடர் என்னை பாதித்தது.  இப்போது அந்த நூல் கிடைக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. பதினைந்து வயதிலேயே மறைமலை அடிகளின் சில நூல்கள் என்னைப் பண்படுத்தின.  மனித வாழ்வில் எல்லாவற்றையும் எல்லாரிடமும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்த முடியாது என்பது உண்மை. ஆனால் அம்மாதிரி மனதில் எழும் கருத்துகள் ஒலியற்ற ஓசைகளாகவே இருந்து விடுகின்றன. சொல்ல விழையும் கருத்துகளை சொல்வதால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு சொல்லாமலேயே விட்டு விடும் இந்த மனித வாழ்வில், அவ்வாறான ஆதங்கங்களை அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.